December 28, 2010

என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிட கூடாதா??:)


அடடா! செம அழகான கண்கள் னு நிறைய பேரை  பார்த்து நான் வியந்தாலும் சட்டுன்னு என்னை மயக்கும் ...பரவசமாக்கும்..மெய்சிலிர்க்க வைக்கும்,நெகிழ வைக்கும்  கண்களும் உண்டு...


மை இடாத,காண்டாக்ட் லென்ஸ் எதுவும் போடாத,மொத்தத்தில் மேக் அப் இல்லாத கண்கள் தான் என் சாய்ஸ் :)))

இந்த வரிசையில் சுவாமி விவேகானந்தர் கண்களை குறிப்பிட விரும்புறேன்...செம பவர்புல் ஸ்பிரிச்சுவல் கண்கள்..யப்பா..!! எங்க வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பது இவரின் கண்கள் தான்..:))


ஓகே..அடுத்து...


அன்னைக்கு என் வண்டியை எடுக்கும்போது என் பாதத்தை ஏதோ தொட்ட உணர்வு...குனிஞ்சு பார்த்தால் அழகான வெள்ளை கலர் குட்டியூண்டு பூனை குட்டி..குட்டியூண்டுன்னால்  அவ்வளவு குட்டி..  குட்டியூண்டு:))))) பயங்கர சந்தோஷமாகி தூக்க முற்படும் போது ,தரையில் படர்ந்த என் துப்பட்டாவின் ஓரமாய் ஒளிஞ்சு அழகாய் அது கண்களை உருட்டி உருட்டி  "மியாவ் "சொன்னதில் ..பரவசமானேன்..என்ன அற்புதமான அழகு அதன் கண்கள்!...அனேகமா விலங்குகளிலேயே பூனைக்கு தான் அழகான கண்களா இருக்குமோ? 


அப்புறம்..


ஒரு லெதர் பேக் தைக்க நான் சென்றபோது .........இரவு -8 மணி,

தைத்தவர்-72 வயது தாத்தா, 

 
இடத்தின் சூழ்நிலை-40 வாட்ஸ் குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம்.

 
ஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..
பவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..

 

எதுக்கு இந்த கண்கள் புராணம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி.....இந்த தலைமுறை குழந்தைகளின் சின்ன பய(யோ) டேட்டா :-

*******************************************************************
பிடித்த உணவுகள் :சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,

சிப்ஸ்,ஐஸ் கிரீம்,கோக்,பெப்சி..
 
பிடித்த பொழுது போக்கு:- ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்..
********************************************************************

போன வாரம்,என் பையனை ஸ்கூல் இல் இருந்து கூப்பிட போனபோது,அவன் பள்ளியில் காத்திருந்த தருணங்களில் ... நான் கண்டு வருத்தப்பட்டது தான்...மேற்சொன்ன எல்லா வரிகளின் தொடர்பும்...


பள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். அதிலும் 3 வயது குட்டிஸ் கூட பவர் கிளாஸ் போட்டு இருந்தது பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு..:(( 

என்னவோ என் ஜெனரேஷனை விட என் பையன் ஜெனரேஷனில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாய் தான் படுது..

பெற்றோர்களின் மரபு வழி பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும் அந்த குறைபாடு வந்து கண்ணாடி அணிந்தால் அது தவிர்க்கவே முடியாத விஷயம்..அது ஓகே..


ஆனால்..நான் மேற்சொன்ன அந்த பய டேட்டாவும் இந்த குறைபாடுகளுக்கு ஒரு காரணம், என் பையன் கூட படிக்கும் குட்டிஸ் இல்  பாதிக்கும் மேலே லஞ்ச்க்கு கொண்டு வரும் உணவு பெரும்பாலும் அந்த காஞ்சு போன நூடில்ஸ் தான்...

 


நம்மில் பெரும்பாலும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளை  குழந்தைகளுக்கு  பழக்கி,சரிவிகித உணவு(balanced diet) அப்டிங்கிற கான்செப்ட் இல் இருந்து விலகி போறது தான் இந்த குறைபாட்டின் அதிகரிப்பா....ம்ம்...வருமுன் காப்பது நல்லது!!!!!


ஓகே..ஓகே...வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :))))...அப்படியே ரெண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டுறேன் டிஸ்கி யில்..


டிஸ்கி 1 : அந்த குட்டியூண்டு பூனை குட்டி பேரு - "சிட்டி"  :)))

 

டிஸ்கி 2 : இந்த ஆண்டில் ,எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்கள்..என் பாலோவேர்ஸ்,என்னை ஊக்கு வித்த:)) ..சை..ஊக்கப்படுத்திய   தோழர்/தோழிகள் மற்றும் திரட்டி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!நன்றி!  உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
December 14, 2010

இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..


சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா?:)) 

மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு "வெள்ளப்புறாவே...பூ போடு " னு கத்தி இருக்கிங்களா? :))

                                                  

                                                   
நான் பார்த்திருக்கேன் :))

                                                   நான் கத்தியிருக்கேன்.
....:))
 

 

எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி :  (என் இனிய நண்பர் "அவர்கள் உண்மைகள்" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம்.   ,என் இனிய தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)
 

தொடர்கிறேன்....

 

(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...


மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....ஓ!! அழகோ அழகு!!!சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே  ரொம்ப புடிச்சிருக்கு.:))என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும்  அற்புதமான வரிகள்...பாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...

காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
  கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
   கீற்று மிள நீரும்.....

......

.....
முத்து சுடர் போலே-நிலா வொளி
   முன்பு வர வேணும்-அங்கு 

கத்துங்குயிலோசை-சற்றே வந்து
  காதில்  படவேணும்....""

இதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
  பத்தினி பெண் வேணும்-எங்கள்
கூட்டு களியினிலே-கவிதைகள்
   கொண்டு தரவேணும்....எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில்  ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....
 


என் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...

 


"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..! "

December 7, 2010

இளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..!!!


பொதுவா, புதுப்பேனா வாங்கும்போது ஏதாவது கிறுக்கி பார்த்தோ, நம்ம பேரை எழுதிபார்த்தோ செக் பண்ணிப்போம்.. ஆனால், நான் "இளையராஜா "பெயரை எழுதி பார்த்து என் அப்பாகிட்டே தலையில் செம "குட்டு" வாங்கி இருக்கேன்...:((

இளையராஜா பேரை சொல்லும்போதே..உடம்புல வயலின் prelude ஆரம்பிச்சிருச்சு எனக்கு...ரொம்பவே அழகான பாட்டை கேட்கும்போதெல்லாம் சட்டுன்னு சில நேரம் யோசிக்காமல் கூட சொல்வேன்...இது இளையராஜா மியூசிக் னு...உடனே இல்ல..இல்ல...இது வேற னு..பதில் வரும்..உண்மையில் அது "வேற" யா தான் இருக்கும்..:)) ஆனாலும்,திரும்பியும் கேசுவல் ஆ சொல்வேன்..."ஓ!வேறயா..அதானே இளையராஜான்னால் இன்னும் நல்லா இருக்கும்....":))

வயலின்,ப்ளூட்,தபேலா வை அதிகமாய் பயன்படுத்தியது மாஸ்ட்ரோவாய் மட்டுமே இருக்கும்ங்கிறது என் பார்வையில்...அதுவும்...அவர் இசையில் சேர்க்கும் கோரஸ்கள்,தந்தனா தானாக்கள்...ர ரா க்கள்...ரப் ரபாக்கள்...இதுக்கெலாம் நான் வெறிபிடிச்ச ரசிகை...:))

ஒரு சிங்கிள் கார்டு(chord ) இல் கூட சுகந்தமாய் விழும் ராஜாவின் முத்து இசை...சில நேரம் ரெஸ்ட் நோட்(rest note) விட்டு கொடுக்கும் சரணங்களில் மூச்சு விட மறந்திருக்கேன்...(eg :மடை திறந்து பாடும் ..frm நிழல்கள் )

இளையராஜா இசையில் இளையராஜாவே பாடினால்...சான்சே இல்ல......

மேஸ்ட்ரோ இசை ரொம்ப ப ப ப ப ப ப ...எனக்கு இம்ப்ரெஸ் ஆன "மந்திர தருணங்கள் "எப்போன்னு இன்னும் சரியா தெரியல...

ம்ம்..யோசிச்சு தான் பார்க்கிறேன்...

ஒருவேளை...
ஏதோ ஒரு அதிகாலை மார்கழி குளிரில் கோவில் போகும்போது எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

"ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்
ப்ரேம வஸ்யப் ப்ரேமம் ,
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் ..............................
.
மங்கள நம ஜீவிதம்...........
ஓம்...சாந்தி...சாந்தி...சாந்தி
!"

ராஜாவின் குரலில் இந்த காந்த கீர்த்தனை..உடம்பின் ஒவ்வொரு செல் லிலும்  போயி உட்காரும்...


அப்படியே ராஜாவின் இந்த கலக்கல் கீர்த்தனை ஆரம்பிச்சு...மெல்லிய டெம்போவில் சித்ராவின்..
"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தேவனே !
இன்று என் ஜீவன் தேடுதே
என் மனம் ஏனோ வாடுதே !" (அறுவடை நாள்) 
எதுக்கு சொர்க்கம் எல்லாம் தேடி போகணும்...இந்த பாட்டு போதும்னு எல்லாம் எமோசன் ஆ யோசிச்சிருக்கேன்..:)

ஒருவேளை...
மழையில் சொட்ட சொட்ட நனைஞ்ச நான் குளிர் தாங்காமல் ஒதுங்கியபோது இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்!!
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்!!

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே"

(அலைகள் ஓய்வதில்லை..)
 
 
ஒருவேளை..
மனபாரத்தில் நான் இருந்த ஒரு அமைதியான  தருணத்தில்  இந்த வரிகளை கேட்ட நொடியிலா..??

"முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்!!
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே..."   (தமிழ் MA)

 

 
ஒருவேளை..
செம குஷியான மூடில் அழகர் கோவில் பக்கம் ரிலாக்ஸ் டிரைவிங் பண்ணும்போது FM இல் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா...... "

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது ?
நாளைக்கே ஆனந்த  விடுதலை
காணட்டும் காணாத உறவில் ....
''''''''
''''''''

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா)

ஹையோ..செமத்தியான என்ன ரிதம்..!! அதுவும் ராஜாவின் தமிழ் உச்சரிப்பு செம க்ளாஸ்..இந்த ல.ள,ழ எல்லாம் உச்சரிக்கும் அழகில் அந்த பாட்டு வரிகள் இன்னும் அழகாகும் கேட்கும்போது...!


ஒருவேளை..
சாலையை கடக்கும்போது என்னை கடந்து சென்ற ஒரு வெளியூர் பஸ்ஸில் இருந்து தற்செயலாய் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"பறந்து செல்ல வழி இல்லையோ… 
பருவக் குயில் தவிக்கிறதே…

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது"! (தர்ம பத்தினி)

இதில் எனக்கு அந்த " பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…"அந்த வரி கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும்...உச்சரிப்பு செமத்தியா இருக்கும். இதுல எந்த எந்த இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் பண்ணிருக்காங்கனு,எண்ணி கூட பார்க்க முயற்சி எல்லாம் பண்ணுவேன்...:)) 


நான் மயங்கிய பாட்டுகள் லிஸ்ட் ரொம்ப பெருசு..இது சும்மா சாம்பிள் தான்...பிறிதொரு சந்தர்ப்பத்தில் முடியும்போது இன்னும் பகிர்வேன்...:)))


அப்புறம்..கடைசியில்  ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))


November 29, 2010

உன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்..!!! கரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை...இப்போ அந்த அதிசயம் தான் நடக்குது இங்கே...

 
நான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....
குட்டி குட்டி நீர் சுனைகள்,கரையோர அரசமர பிள்ளையார்,அதிகாலை ஆற்றங்கரையில் சலவை தொழிலாளர்களின் வேலை சுறுசுறுப்பு,நீர் குடித்து போகும் நாரை கூட்டங்கள்,பொதி சுமக்கும் கழுதைகளின் அணிவகுப்பு,ஆற்று மணலில் சிறுமிகளின் கிச்சு கிச்சு தாம்பாள விளையாட்டு, சிறுவர்களின் உற்சாக கம்மாய் மீன் வேட்டை....இப்படி பல..பல... :-)))

இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((


 
வைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))
 
என் ஆறு வயதில் பாட்டியுடன் நானும் தினம் தோறும் விடிகாலையில் வைகை கரையோர பிள்ளையார் கோவில் போறது வழக்கம். பாட்டி ஒரு குடத்தில் ஆற்று நீரை மோந்துட்டு வந்து பிள்ளையாரை குளிப்பாட்டி தீபம் ஏற்றி கும்பிடுவாங்க..பின்னாடியே நானும் ஒரு சின்ன டம்ளரில் ஆற்றில் நீர் எடுத்துட்டு வந்து பிள்ளையார் மேலே மெது மெதுவாய் ஊத்துவேன்...என்னவோ நானே சாமியை குளிப்பாட்டி விடும் சந்தோஷம்...அப்போ வைகையே உன்னை  ,பிள்ளையார்,அந்த குளிர் ,அந்த அரசமரம்,என் பாட்டி எல்லாமே ரொம்ப பிடிக்கும்...பிடிக்கும்..பிடி க்கும்...:))))
                                                             
"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர்
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
 

அப்புறம்,என்  8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி(?!#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((


"ஆற்றின்

சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி
தேடி.......!

என் விழிநீர் பட்டு

உன்
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..........!"


வைகை மணலில் விளையாட செல்லும்போது  நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....


மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....


வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்....:-))))))


வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!
 


"வைகையே!!

அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்
!!

அவனிடம்

சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த

என் சின்னஞ்சிறு
காலடித்  தடங்களை...!!!!!! "                                    

November 15, 2010

அட!! என்னைச் சுற்றி இத்தனை அழகா??
அட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்கு இதை சொல்றேன்னால்....

சமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான  நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்..
)))


"கோடாலி கொண்ட போட்ட..
கண்டாங்கி சேல பாட்டி!!
எவ்வுடை தரித்தாலும்
நீ அழகு சீமாட்டி!!
உனக்கு ரொம்ப
அழகா இருக்கே நைட்டி!!"))


 போகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..

அவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் "டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா.."
 

"நான் குடித்த

தேநீர் ருசியை விட
உன்
சிறுநீர்
சீர்திருத்தம்
அருமை!!" )))தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...

இந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார்  காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்!! 


ஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..

அவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்
னவோ அந்த காகித குவியல்கள் பணமாய் தெரியவில்லை...


"வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!
அழகே! உன்னைச் சுற்றி நான்!!"

November 9, 2010

கல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் !!!தீபாவளி நல்லபடியா முடிஞ்சதா?...தீபாவளி முதல் நாள் நான் பார்த்த அடைமழை&பேய் மழை இரவில் ,  ஓலைக்குடிசை மறைவில் சோகமாய் மாவு வித்துகிட்டு  இருந்த பாட்டிக்கும்,புதுசெருப்பை மழை தண்ணியில் தவற விட்டுட்டு , புலம்பிகிட்டே  தேங்கி கிடந்த தண்ணிக்குள் கை விட்டு தேடி கொண்டு இருந்த நடுத்தர ஏழை மனிதருக்கும்,ஒரே ஒரு பழைய தையல் மெஷினை ரோட்டு ஓரமாய் போட்டு ஏக பிசி யாய் தச்சிட்டு இருந்த வயசான டைலர் தாத்தாவுக்கும் கூட நல்லபடியா தீபாவளி முடிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...

அது போகட்டும்...

உண்மையை மறைக்கிறதும்,பொய் சொல்றதும் ரெண்டும் ஒண்ணா??

(... Hypothetical
கொஸ்டின்..:(ஹீ...ஹீ)))    )

ம்ம்...ரெண்டும் வேற வேற பிரிக்க முடியும் அதன் சூழ்நிலையை   பொறுத்து இல்லையா??
 
(ஆமாம்...நம்மூரு அரசியல் வாதி சரியா இந்த ரெண்டையும் யூஸ் பண்ணமுடியும்...:))   )
இப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி கோவையில் நடந்த குழந்தைகள் கடத்தல் கொலை நம்ம எல்லாருக்கும் தெரியும்...நிச்சயம் எல்லாருக்கும் ஏக வருத்தம் தான்...ஊடகம் தான் தகவலை ஒன்னு விடாமல் சொன்னது...அதெல்லாம் சரிதான்...ஆனால் .......

ம்...சில நேரங்களில் சில உண்மைகள் மறைக்கறது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்...நல்லா கவனிக்கணும்..மறைக்க்கலாம்
னு தான் சொன்னேன்..பொய் சொல்லலாம்னு சொல்லலை...


இன்வெஸ்டிகேசன் பண்ண பண்ண ஒரு மனித மிருகம் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலைபண்ணி இருக்குனு ஊடகம் வெளியிட்டது...ம்ம்...அதை படிச்சபிறகு நமக்கு அந்த மனித மிருகங்கள் மேலே ஆத்திரம் வருவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் க்கு...ம்ம்...இது ரொம்ப உணர்வுபூர்வமான மெல்லிய விஷயம் இல்லையா...தன்குழந்தை இப்படி தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்கிற அதீத வேதனை உலகம் பூராவும் இந்த விஷயம் பறைசாற்ற படுறதும் கூடுதல் வேதனை தான்  தந்திருக்குங்க்றது என் தனிப்பட்ட கருத்து...

(ம்ம்...எரியிற கொள்ளியில் இன்னும் எண்ணெய் விடுற மாதிரி தான்...)

NEWS- Anything NEW, that is NEWS  

இப்படி தான் ஊடகம் தன் சோலி பார்க்குது..மதுரையில் ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு பெண் கொலை செய்யபட்டாங்க...கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறாங்க...இந்த பெண் கொலை செய்யப்பட்டவுடன் ஏகப்பட்ட விஷம கணிப்பு ஊடகத்திற்கு...தனியா இருந்த பெண் இறந்ததால் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை பத்திய தவறான கருத்துக்கள் சூடான செய்திகளாக  தினம் தோறும் பத்திரிகையில் வெளியிட்டது ...உண்மை ,பொய் அது எதுன்னு பிரச்சனை இல்லை...ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டே போய்ட்டாங்க ..காரணம் மீடியா பண்ண அசிங்கமான கணிப்புகள் தான்..

(சர்க்குலேசன்...)


இதேமாதிரி சென்னையில் எங்கள் குடும்ப நண்பரின் நண்பருக்கும் இந்த கசப்பான அனுபவம் நடந்துருக்கு...நகைக்காக அவர் மனைவி கொல்லப்பட,வழக்கம்போலே அசிங்கமான கணிப்புகள்...இப்போ அவர் தன் வயதுக்கு வந்த மகள்,மகனுடன் வெளி மாநிலம் போயிட்டதா குடும்ப நண்பர் வருத்தமாய் சொன்னார்...

அதனாலே உண்மைகள் பொய்களா திரிக்கபடனும் சொல்ல வரல ...ஆனால் சில உண்மைகள் மறைக்கபடனும் இல்லாட்டி அதை மேற்கொண்டு பப்ளிசிட்டி க்காக திரிச்சு சம்பந்த பட்ட குடும்பங்களின் மனசை நொறுக்கிற மாதிரி இல்லாமல் இருந்தாலே நல்லது தான்...


(நயன்தாரா விஷயம் பரபரப்பா வந்துசுனால் அந்த நடிகைக்கு மார்கெட் வால்யு கூடும்..ஆனால் சராசரி மனிதர்கள் ன்னால்  வாழ்க்கையின் நடைமுறையே  கேள்வி குறியாக்கவும் செய்யுது)

 
இன்னைக்கு  நான் முதலில் சொன்ன மனித மிருகத்தில் ஒன்னு என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கு...ரொம்ப நல்லவிஷயம்தான்  ...ஆனால் இங்கே நிச்சயம் உண்மை மறைக்கப்பட்டு இருக்கும்...என்கவுன்ட்டர்ங்க்றது உட்டாலக்கடி நாடகம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்...ஆனால் ஊடகம் மறந்தும் இதுபத்தி கதை திரிக்காது....
(..சரி..சரி ரிலாக்ஸ்...)

  

October 30, 2010

சில தேவதூதர்களும்..தெருவோர குப்பைகளும்..தீபாவளி வரபோகுது..என்ன நீங்க  எல்லாருக்கும் தீபாவளி இனாம் கொடுத்தாச்சா? தலைய சொரிஞ்சுட்டு நிக்கும் கீழ் மட்ட பிரதிநிதி முதல் மேல்மட்ட பிரதிநிதி வரை காசு கொடுத்து முடிச்சாச்சா? :))))

(போஸ்ட் மேன் க்கு 100 ரூபா கொடுத்தேன்..ஹீ..ஹீ..இனாம் இல்லையா? னு திருப்பி கேக்குறார்..அட கொடுமையே...இது என்ன பொரி சாப்பிடவா? இது தான் பா இனாம் னு சொன்னால்..இது பிசுகோத்து காசு...பிஜிலி வெடி வாங்க கூட பத்தாதுன்னு பேச்சு வேற...)

(அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் நம்ம முதல்வர் இலவச வெடி தரமாட்டாரா..??:))) )


(ஹீ..ஹீ..மே மாசம்  நம்ம மக்கள் வோட்டு டப்பாசு  "அவிய்ங்களுக்கு" நிறைய கொடுக்கபோறாங்களே...:))  )

ஒரு வாரமா இனாம் கொடுத்து நொந்து போயிருந்த நேரத்தில்,நேத்து ரெண்டு பேரு வந்தாங்க...அவங்க மாற்று திறனாளிகள்(ரெண்டுபேருக்குமே கண் பார்வை இல்லை)..கையில் ஊதுபத்தி,ப்ளீசிங் பவுடர் ருடன் என்னை கூப்பிட்டாங்க...அவங்களை பார்த்து கஷ்டம் ஆகி..."அண்ணன்..பொருளாய் எதுவும் உங்க கிட்டே நான் வாங்கலை..இந்த பணம் மட்டும் வச்சு கோங்கன்னு சொன்னேன் "...அவங்க அடுத்து சொன்னது தான் என் கன்னத்தில் அடிச்ச மாதிரி இருந்தது...

 

"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்..."

கொஞ்சம் வெல வெலத்துட்டேன்...மாற்று திறனாளியாக அந்த மனிதர்கள் இருந்தாலும்...அவர்கள் செயல்,பேச்சில் தெரிந்த சுயமரியாதை ரொம்பவே பிடிச்சு இருந்தது...

(அதற்கு  முதல் நாள் மண்ட சொரிஞ்சுட்டு அசட்டு சிரிப்பில் இனாம் வாங்கி போன சில 'மனிதருள் மாணிக்கங்களும்" நினைவுக்கு வந்துட்டு போனாங்க...)


சில ஆதங்கங்களும் எனக்கு இருக்கு...


 

பழனி மலைக்கு மேலே ஏறும்போது வழி எங்கும் மொய்க்கும் மாற்று திறனாளிகள் போர்வையில் சுத்தும் போலி மனிதர்களை கண்டு ஆத்திரம் பயங்கரமாய் வரும்...(எல்லாமே டூப்பு...செயற்கையாய் எதையாவது மாட்டி..ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கும் ரேஞ் இல் இருக்கும் அவர்கள் நடிப்பு ரொம்பவே சூப்பர்...)

(அப்போ தமிழ்நாட்டில் ஏகப்பட்ட "உலகநாயகர்கள்" சுத்திட்டு  இருக்காங்க போலே)


 


சமீபத்தில் திருச்சி வயலூர் போயிருந்தோம்..அங்கேயே அன்னதானமும் எங்கள் குடும்பத்தார் செஞ்சாங்க...கொடுத்த உணவுகளுக்கு பெருசாய் மதிப்பில்லை..எல்லாம் சிதறி கிடந்தன..கேட்டால் கோவிலையே அன்னதானம் செய்றாங்களே னு ஒரு நக்கல் பேச்சு வேற...நல்லது தான்..அங்கே சாப்பிட காத்திருந்தவங்களில் பலரை பார்த்தால் ஏகப்பட்ட எரிச்சல்...பீடி அடிச்சுட்டு...வெட்டியா பேசிட்டு சாப்பாடு நேரத்துக்கு ஆஜர்...சில நேரங்களில் இந்த நலத்திட்டங்களில் மேலே ஒரு மதிப்பே இல்லாமல் கூட போயிருது...

(அஞ்சா நெஞ்சன் அண்ணாகிட்டே சொன்னால் இவங்களுக்கு ஹார்லிக்ஸ் அனுப்புவாங்களோ:))  )


 


என்னுடன் வந்த பேராசிரியை சொன்னாங்க...உழைச்சு சாப்பிடும் அருமை நிறைய பேருக்கு தெரியாமல் போக போகுது...சாப்பாடு ஓசியா கொடுத்தால் சில சோம்பேறிகளை ஊக்குவிக்கவும்  சந்தர்ப்பம் இருக்குன்னாங்க..நான் கேட்டேன்..அப்போ வயசான, முடியாதவங்களுக்கு இது நல்ல திட்டம் தானே னு ...


அவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க..."தானம்,தரங்கெட்ட மனிதர்களை மட்டுமே ஊக்குவிக்க கூடாது "


அதுபோலே வடலூர் சத்திய சன்மார்க்க சபை  போயிருந்தபோதும் இந்த அனுபவம் இருக்கு...

அங்கேயும் மூணு வேளையும் இலவச அன்னதானம்...சாப்பிட்டு முடிச்ச ஒரு ஆள் எங்ககிட்டே வந்து காசு கொடுங்கன்னு அனத்தல்..சாப்ட முடிச்சுட்டதானே அப்புறம் என்ன காசு னு கேட்டால்..தலைய சொரியிறான்...
(பீடி,சிகரட்டுக்கு பணம் பத்தலை போலே..)

ரெண்டுநாளைக்கு முன்னாடி செய்தி தாளில் பார்த்தேன்...மதுரையில் மாற்று திறனாளி மனிதர் ஒரு திருடனை விரட்டி பிடிச்சு போலீஸ் இல் ஒப்படைச்சுருக்கார் னு...இதெல்லாம் படிக்கும்போது ரொம்ப பெருமையா கூட இருக்கு...அப்புறம் இன்னொரு விஷயம்...

குடும்ப நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள்...அவங்க எங்களை வரசொன்னது "மதுரை பறவை பார்வையற்றோர் பள்ளி "..அந்த சின்னஞ்சிறு  பார்வை இழந்த குழந்தைகளை பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும்..எல்லாரும் சாப்பாடு பரிமாறினோம்...சில குழந்தைகளுக்கு எங்கே சாப்பாடு இருக்குனு கூட சரியா கணிக்க முடியாமல் திணறினாங்க..ரொம்ப வேதனையாகி நான் ஊட்டி விட முயற்சி பண்ணும்போது...வேண்டாம்...கொஞ்
சநேரம் கஷ்டமா இருக்கும்...ஆனால் கணிச்சுருவோம்..சரியா சாப்பிட்டு விடுவோம்னு சொன்ன தன்னம்பிக்கை..இயலாமையை காமிக்காத அவர்களின் பாங்கு...ராயல் சல்யூட் குழந்தைகளே...!


 
எல்லா உறுப்புகளும் கடவுள் சரியா கொடுத்தும்  கூட உருபடாத மனிதர்(?)கள் மத்தியில் இவர்கள் சுயமரியாதை பார்க்க சந்தோஷமா கூட இருக்கு..!!


October 27, 2010

அன்புப் பரிசாய் வோட்டு போடலாம்..!!


இந்த மெயில் நம்மில் நிறைய பேருக்கு வந்துருக்கலாம்..நிறைய பதிவர்கள் கூட இதை தங்கள் ப்ளாக் இல் வெளியிட்டு இருக்காங்க....உங்களில் நிறைய பேர் வோட்டும் போட்டு இருக்கலாம்...

ஆனால் என் பதிவில் நிச்சயம் ஒரு சிறப்பு இருக்கு..ஏன் என்றால் இந்த நாராயண் கிருஷ்ணன் எங்க ஊருகாரர்..அதைவிட இன்னும் சிறப்பாய் சொன்னால் எங்க ஏரியா காரர்...அடிக்கடி நான் இவரை பார்த்து இருக்கேன்...


எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ஒரு வீடு தான் அக்ஷயா தொண்டு நிறுவன கட்டிடம். அது ஒரு பெரிய வீடு..எந்நேரமும் யாராவது சமைக்கும் நடமாட்டம் தெரியும்...ஆம்னி ஒன்னு எப்பவும் வெளியே நிக்கும்...அதில் சாப்பாடு பார்சல் மூட்டை மூட்டையா எடுத்து கொள்ளப்பட்டு, அந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் கிளம்புவாங்க...கோவில்,சர்ச் வெளியே நிறைய மனநிலை பாதிக்க பட்டவங்க இருப்பாங்க..அவங்களை சுத்தபடுத்தி சாப்பிட வைப்பாங்க...அப்புறம் ரொம்ப வயசான பிளாட்பார வாசிகளுக்கு உணவு பொட்டலம் கொடுப்பாங்க...அடிபட்ட தெருவோர நாய்க்குட்டிகளுக்கு கூட சாப்பாடு வைப்பாங்க...கோவிலுக்கு வெளியே புத்தகம் விக்கும் சிறுமி/சிறுவர்களை நாம  அவ்வளவாக கவனிக்க மாட்டோம்...இவங்க அவங்களுக்கு சாப்பாடு பார்சல் கொடுப்பதை நிறைய வாட்டி பார்த்து இருக்கேன்..ரிக்ஸா ஓட்டி களைத்த ஊழியனுக்கும் சாப்பாடு உண்டு..

மக்கள் தொடர்பு படிப்பு சம்மந்தமாய் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் நான் ஒரு வோர்ஷாப் இல் கலந்து கொண்டபோது  இவரின் தொண்டு நிறுவன க்ளிப்பிங்க்ஸ் உம் பெரிதாய் காமிச்சாங்க எங்களிடையே ..அப்போ கூட பெருசா நான் நினைக்கலை...(ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு)இதுல என்ன ஒருவிஷயம்னால் இந்த ஏரியா வில் நாங்க பல வருஷமா இருந்தும் எந்த ஆர்ப்பாட்டமும் ,எந்த பப்ளிசிட்டி யும் அந்த நிறுவனத்தில் நான் பார்த்ததே இல்லை..எங்க கிட்டே எல்லாம் ஒரு அஞ்சு பைசா கூட நன்கொடைன்னு அவங்க வாங்கினதும் இல்லை..நேற்று கூட அந்த பக்கம் போயி பார்த்தேன்...எனக்கு வோட்டு போடுங்கன்னு  எந்த பிளாக்ஸ்,banner  ரும் அந்த பக்கம் மருந்துக்கு கூட இல்லை..உண்மைய சொன்னால் எனக்கே ஈமெயில் பார்த்து தான் cnn அளவுக்கு பிரபலம்னு தெரிஞ்சுட்டேன்..நிச்சயமா இது தான் ஈடில்லாத தொண்டுனு சொல்ல முடியும்...அதுவும் எங்க ஊரில் விளம்பரம்,போஸ்டர்,கட் அவுட் களுக்கிடையில் வாழும் எனக்கு இந்த செய்தி மதுரை யில் கூட எந்த அளவுக்கு ரீச்ஆய்ருக்குனு
தெரில...லோகல் செய்தி தாள் எதிலுமே இது பத்தி வரவே இல்லை..மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயங்களில் ரணும்னு முன்னுரிமை கொடுத்தவங்க இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் ஏன் தள்ளி வைக்கிறாங்கன்னு தெரில...

வோட்டு நவம்பர் 18  வரை போடலாம்..முதன்முதலாய் ஒரு நல்லவிஷயத்துக்காக
,மனசார போடலாம்...கூமூட்டை அரசியல் வியாதிகளுக்கெல்லாம்..சை..அரசி யல் வாதிகளுக்கெல்லாம் வோட்டு போடுறோம் எரிச்சலுடன்..இதை சந்தோஷமா செய்யலாம்..அவர் ஜெயிச்சால் ஒரு தமிழனுக்கு அதை விட ஒரு இந்தியன் அவன் தொண்டுக்காக கவுரவிக்க பட்டதை பகிர்ந்துக்கலாம் இல்லையா...

தயவு செஞ்சு..மடி ஏந்தி..இப்படி எல்லாம் வார்த்தை உபயோக படுத்த நான் விரும்பல..ஒரு தொண்டுமனிதனுக்கு நாம் போடும் வோட்டு அவன் சேவையில் இன்னும் பல படி உயர்த்தும்னு நம்புறேன்..எதுக்கு பிச்சை எடுக்கும் தொனியில் கேக்க வேண்டும் ...

நீங்க இதை அங்கீகரிக்க ஆசைபட்டால் உங்களோட எத்தனை வோட்டுகளையும் அவருக்கு கொடுத்துட்டு போங்க ஒரு அன்பு பரிசாக!!that z all!


அன்புடன்,
ஆனந்தி...anyway ...ஈமெயில் விஷயத்தை அப்படியே கீழே கொடுத்து இருக்கேன்...மறக்காமல் வோட்டு போட்டு போங்க..

நீங்களும் நானும் செய்யத் தயங்கும் சமூகப் பணியை விருப்பத்தோடு கடந்த எட்டு ஆண்டுகளாக தடையின்றி செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள்.


இவரின் இந்த தொண்டை அங்கீகரித்து CNN நிறுவனம் உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் ஒருவர் முதலாவதாக வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார். இந்த சாதனைத் தமிழன், இந்தியன் வெற்றி பெற நாம் நம் நேரத்தில் கொஞ்சத்தை செலவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

ஓட்டளிக்க செல்லவேண்டிய பக்கம்
http://heroes.cnn.com/vote.aspx

ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டும் என்றாலும் செய்யலாம். கட்டணம் எதுவும் இல்லை. நம் நேரம் மட்டுமே தேவை. தயவு செய்து ஓட்டு அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி என்ன சாதனை செய்துட்டார்னு பார்க்கறீங்களா? ரோட்டில் மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்வோம். பரிதாபப் படுவோம் அல்லது ஒதுங்கி செல்வோம். ஆனால் இவர் கடந்து எட்டு ஆண்டுகளாக இது போன்ற 400பேரை தினந்தோறும் தேடிச்சென்று மூன்று வேளையும் உணவளித்து ஊட்டி விடுகிறார். ஒரு சமையல் கலை நிபுணரான இவர் தனக்கு வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறி விட்டு இப்பணியைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஒரு முதியவர் பசியால் தன் மலத்தையே உண்ட காட்சி இவரை பாதித்து விட்டது. வேலையை தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து இப்பணியை செய்து வருகிறார். தினந்தோறும் 100சதுர கிலோமீட்டர் பரப்பலவில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு வீதி வீதியாக தேடிச் சென்று மூன்று நேரமும் உணவளிக்கிறார். இதுவரைஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.

இந்த மாமனிதரை வெற்றிபெறச் செய்வது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் கடமை.

தயவு செய்து ஒட்டு போடுங்கள். மீண்டும் அந்த பக்க முகவரியை கொடுக்கிறேன்
http://heroes.cnn.com/vote.aspx


(feedback: நேத்து (27.10.10) இந்த  போஸ்ட் டில் டில் லோக்கல் செய்தி தாளில் இந்த மனிதர் பத்தி எதுவும் வரலைன்னு சொல்லி இருந்தேன்..இன்னைக்கு காலையில் வந்து இருந்தது இவரை பத்தி...ஆனால் cnn il முதல் பத்துக்குள் வந்ததை பத்தி மட்டுமே சொல்லி இருந்தது ,அந்த 10 க்குள் நடக்கும் இந்த ஈமெயில் வோட்டு பற்றி எதுவும் காணோம்...ம்ம்..இது தான் அரைகுறை ஊடக வேலை ங்கறது..ஒருவேளை நாமலே classifieds இல் காசு கொடுத்து இதுக்கும் விளம்பரம் பண்ணனும் போலே...((  )   )


October 23, 2010

தேவதை(?!)யிடம் வசமாய் சிக்கி கொண்ட சில அழகான வரிகள்..
ஒரு காதலன், காதலி கிட்டே நாளைக்கு உலகமே இல்லாட்டி நீ என்ன பண்ணுவனு கேட்டால்...
 

காதலி என்ன சொல்லுவாள்...ம்ம்...

"உயிரே..
.என்னாலே அப்படி நினைச்சு பார்க்க முடிலன்னு சொல்லலாம்..இல்லாட்டி இன்னைக்கே சேர்ந்து செத்துரலமா னு கேட்கலாம்..இல்லாட்டி இப்பவே போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்கலாம்..."

இல்லையா? ம்ம்..

இதுல இருந்து கொஞ்சம் விலகி கொஞ்சம் அழகாய் காதலன்,காதலிக்குளே நடக்கும் அழகான கவிதை பத்தி தான் சொல்ல போறேன்...
   

  "ஆயிரம் பூவில்  படுக்கையும் அமைத்து
   உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்."

  ஐயோ..பயபடவேணாம்...சத்தியமா நான் எழுதவே இல்லை...(அந்த அளவுக்கு அறிவெல்லாம் இல்ல நமக்கு :-))  )இப்படி ஒரு காதலன் காதலிட்ட சொல்றது எனக்கு வித்யாசமா பட்டது..

  இந்த இசை இந்த தே(வதை) கிட்டே சிக்கிருச்சு...முழுசா சொல்லிட்டு போய்டுறேன்...ஓகே வா....                                    
  ரஹ்மான் இசையில் ரொம்ப சில தான் மனசுக்குள்ளே போயி உட்கர்ந்துருக்கு..(என் இசை ஞானம் அவளவு தான்)

  சரியான,திகட்டாத இசை,பொருத்தமான பின்னணி பாடகர்கள்,அதையெல்லாம் தவிர...நெகிழ்ச்சியான,ரசனையான வைரமுத்துவின் வரிகள்(அப்படி தான் நினைக்கிறேன்)..எல்லாம் மிக்ஸ் ஆன என் ஆல் டைம் பேவரைட் சாங் லவ் பேர்ட்ஸ் படத்தில் வரும்.." நாளை உலகம்" பாட்டு..

  பொதுவாய் திரைப்படத்தில் ஒரு காதலன்,காதலியின் டூயட் பாட்டு..கண்ணு,மூக்கு வருணிச்சு..தைமாசம் முகூர்த்தம்,மானே,தேனே ரேஞ் இல் தான் பெரும்பாலும் இருக்கும்...

  ஆனால் என்னவோ இந்த பாட்டில் ரொம்பவே வித்யாசமாய் அந்த பொது விதிகள் மீறப்பட்டு உலகமே நாளைக்கு இல்லாட்டி நீ என்ன பண்ணுவ ன்னு காதலனை காதலியும்,காதலியை காதலனும் கேட்டுக்கிறாங்க..அந்த பதில்கள் கூட சுவாரஸ்யம்..அதில் எதிலுமே கண்ணே..உனக்கு மலைய கொண்டுவந்து வைப்பேன்..வைரம் கொடுப்பேன்ன்னு மிகைபடுத்துதல் (cinematic exaggeration)னு எல்லாம் டிப்லோமடிக்(diplomatic) ஆ இல்லாமல்...ரசனையான நெகிழவைக்கும் காதல் வரிகள் இந்த பாட்டில் இருந்தது ...

  இசை:ரஹ்மான்..
  பாடியவர்கள் :சித்ரா,உன்னிக்ருஷ்ணன்
  படம்: லவ் பேர்ட்ஸ் 

  அந்த முழுபாட்டின் வரிகளும் ரொம்பவே உணர்வு பூர்வமா இருந்தது..எனக்கு...
   
  அது....  காதலன்  காதலிட்ட: நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

   
                     கண்களை திறந்து, காலங்கள் மறந்து
                     கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
                 
                     மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
                     கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

                     
                     உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
                     நீ மட்டும் வாழ தொழுகை  செய்வேன்
                    
                   
  காதலி சொல்றாங்க இப்ப..
                    ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
                    ஒருநாளில் வாழ்ந்து கொள்வேன். 
                     
                     உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
                     இருவிழி மூடிக்கொள்வேன். 
                     
                     மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
                     மரணத்தை மரிக்க வைப்பேன்....
                           

           It is the time for காதலன்..


                         வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
                         உனை நான் தழுவிக்கொள்வேன்..
                  
                         ஆயிரம் பூவில்  படுக்கையும் அமைத்து
                          உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.

                         என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
                         உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.  எனக்கு ரொம்பவே புடிச்ச வரிகள் எல்லாமே..இசையை விட வரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அருமையான உணர்வு பூர்வமான பாட்டு இது ...


  (இந்த பாட்டில் எனக்கு opening,finishing prelude (keyboard cum violin harmony)கூட ரொம்ப பிடிச்சு இருந்தது...)

  (இதோட வீடியோ பார்க்கனும்னால் இந்த லிங்க் இல் பார்க்கலாம்..(என்னவோ வீடியோ அவ்வளவா எனக்கு பிடிக்கல)
  http://www.youtube.com/watch?v=S3UtV9EIra8
        
                    
                       

  October 17, 2010

  மதுரை மக்காஸ் எங்கே இருந்தாலும் உடனே ஓடி வரவும்...!!  "பெண் மகாத்மா நாளை மதுரை வருகிறார்..காந்தி எப்படி வெள்ளையர்களை விரட்ட போராட்டம் நடத்தினாரோ,தமிழகத்தை ஆளும் வெள்ளையர்(?!)களை விரட்ட நம் புரட்சி தலைவி பெண் மகாத்மா நம் அம்மா வருகிறார்...உணர்ச்சி போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் வரவும்.."


  கடவுளே..கருப்பசாமி சத்தியமா எனக்கும்,இந்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! இல்லவே இல்லை !


  இது மதுரை மாணவர் அணி அ.தி.மு.க செயலாளர் உணர்ச்சி வசப்பட்டு உளறினது...
  அப்புறம் மதுரை மக்காஸ் எங்கிருந்தாலும் வந்துருங்க மதுரைக்கு...


  2 காரணம் இருக்கு ...


  1 . நாளை நம் பெண் மகாத்மா வருகையை ஒட்டி தி,மு.க க்கு டப் கொடுக்கும் வேலை நடந்துட்டு இருக்கு...அமெரிக்க,ஐரோப்பா,ரஷ்யா போன்ற தம்மாந்துண்டு இடங்களில் இருந்து கூட லாரி மூலம் தொண்டர்கள் அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது.. சிக்கன் பிரியாணி,குத்தாட்டம்,500 ரூபா...மற்றும் பல..பல...(புரிஞ்சுடால் சரி..இல்லாட்டி சுட்டி டிவி மட்டும் பார்க்க ஓடலாம்..)தயார் நிலையில் இருக்கிறது...சோ..வரவும் உடனே..


  2 . அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலுக்கு பட்டதாரிகள் வோட்டு வேட்டை நடக்கிறது..ஒரு பட்டதாரி வோட்டுக்கு குறைஞ்சது 5000 ரூபா என்று அஞ்சா நெஞ்சன் அண்ணன் தரப்பு பேசிக்குது...மதுரை பட்டதாரிகளே...உடனே வரவும்...


  அப்புறம் ஒரு சுவாரஸ்யம்...எங்க ஏரியா ஆளு நாளைக்கு நம் "பெண் மகாத்மா" முன்னாடி அ.தி.மு.க வில் இணைகிறார்...


  (ஹலோ..இதுல என்னை சுவாரஸ்யம்...?)


  சேரும் ஆளு பேரு "உதய சூரியன்"...


  (டிஸ்கி-ஹீ..ஹீ...அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...)


  October 16, 2010

  ஒரு விஷயம் சொல்லிட்டு ஓடி போய்டுறேனே..!!


  ஹலோ! எப்புடி இருக்கீங்க??


  (என்னனு சொல்லிட்டு சீக்கிரம் ஓடி போய்டு..)


  அது எப்படி உடனே சொல்றதாம்?


  ஆங்! சின்னதா புலம்பிட்டு சொன்னால் போச்சு...


  (சரி!சரி! ப்ளேடு போடாமல் டெல் மீ....)
  அதாகப்பட்டது என்னவென்றால்....


  (யக்கா..பில்ட் அப் ஸ்டாப்...முடில..அழுதுருவேன்..!!)
  ஓகே!ஓகே! வேற ஒன்னும் இல்லைங்க..இந்த 'எந்திரன்' பீவர் கடந்த பத்து நாளா என்னை பாடா படுத்துது..!!
  கோலம் போடும்போது பக்கத்து வீட்டு அக்கா ஐஸ்வர்யா ராய் பத்தி அரைமணி நேராம் அறுக்குறாங்க. பேந்த,பேந்த முழிச்ச என்னை படம் இன்னும் பார்கலயானு கேவலமா பாக்குறாங்க..


  (அடி ஆத்தி..!)
  கார் கிளீனர் பையன்ட ஏண்டா லேட்டுனு கேட்டால்...தலைய சொரிஞ்ச்ட்டே "செகண்ட் ஷோ எந்திரன்க்கா" ங்கிறான்..


  அதுக்கு இவ்வளவு லேட் டான்னு நான் மொறச்சால்..."நீ என் தலைவன் படம் பார்க்காம பேசாதன்னு" சண்டைக்கு வரான்...


  (அடடே..!)
  கடைக்கு போனால், கடைக்கார ஆளு, " சீக்கிரம் நவுரு..நவுரு..எந்திரன் போகனுங்குறார்..."


  (ஹீ,,,ஹி.. நல்லா வேணும்..)


  ஐயயோனு கோவிலுக்கு போனால்...


  ஐயருமாமா "எந்திரன் பார்துட்டியானோ கொழந்தே..!" ன்னு கேள்வி கேட்டே வெரட்டி விடுறார்..


  (ஹீ..ஹீ..நீ கொழந்தையா..அப்போ ஐயரு மாமாக்கு 100 வயசு இருக்குமா?)
  என்னங்கடா வம்பா போச்சுன்னு...


  வெறுத்துபோய்..நொந்து போய்..கொதித்து போய்..


  நானும்...நானும்...


  "எந்திரன் பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.."


  (டிஸ்கி...அட சை..இது தான் அந்த ஒரே வரியா...??


  ஆமாம்..படம் எப்புடி??)
  ஹீ..ஹீ...ஆள விடு..!! பை..!!

  October 9, 2010

  தே(வதை)யும்,மொக்கைபுலம்பல்களும்..
  நீங்க ரொம்ப நல்லவங்களா..வல்லவங்களா..தெகிரிய சாலியா இருந்தால்..மேற்கொண்டு அடுத்த பாரா வரிகளை படிச்சுட்டு நகருங்க...இல்ல..அதெல்லாம் முடியாது..என்னை மாதிரி நீங்களும் டம்மி பீஸ் னு ஒத்துகிட்டேங்கனால்..அப்படிக்கா அடுத்த பாரா ஓடி போய்டுங்க..  "இறையாமையின் நிகழ்வுகளில், சில உந்துதலுக்கு கட்டுப்பட்டு உயிர் நோக்கி உறங்கும் உச்ச வேளையில்..பிறக்காத பிறையான ஒரு உச்சி வெம் பொழுதில்..இறவாமல் இறந்தும் யாசிக்கும் என் உடல் தழுவும் நாசி முனை ...."  இதாங்க...இதே தான்..இந்த மாதிரி தமிழில் தான் நான் அட்டு மக்கா இருக்கேன்..இப்ப பாருங்க நானே எழுதிட்டு ..ஒருவாட்டி இப்ப படிச்சு பார்க்கிறேன்..அட மாரியாத்தா..என்னனு எனக்கே புரியல..உங்களுக்கும் புரியாதுன்னு தெரியுமே..


  (டிஸ்கி:: இப்ப என்ன செய்விங்க..இப்ப என்ன செய்விங்க..??)
  இப்ப எதுக்கு இந்த புலம்பல் னு கேக்குறிங்களா??  இதோ..அந்த கொடுமைய தான் சொல்லபோறேன்..  இப்ப ஒரு பிளாஷ் பாக் போறோம்..
  அட இந்த கருமம் வேறயான்னு ஓடி போயடாதிங்க..பொறுமை. பொறுமை..அது எருமைய விட அவசியம் ..
  (டிஸ்கி:: பில்டப் பலமா இருக்கே ..கொஞ்சம் ஓவரா இல்ல இதெல்லாம்??...)  அப்போ எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்..தரையில் எப்பவுமே காலு இருக்காது..(பேய் நடமாட்டம் சாஸ்தி தான் )எப்பவுமே பறந்துட்டே இருக்கனுங்கிற  பட்டாம்பூச்சி மனசு(எப்புடி நாங்களும் வருணிப்போம்ல   ..) எனக்கு அந்த வயசுல என்னவாகனும்னு கேட்டால் மத்த நல்லபுள்ளைங்க சொல்றமாதிரி டாக்டர் ஆகோணும்..டீச்சர் ஆகோணும்.. னு எல்லாம் சின்னபுள்ள தனமா சொல்லவே மாட்டேனே..மாட்டு வண்டி ஓட்டனும்..லாரி ஓட்டனும்..கோனாரு அப்பத்தா மாதிரி எருவாட்டி தட்டனும்,,ரேஞ்ஜில் தான் நம்ம கனவு,லட்சியம் ன்னு ஒரு உயர்ந்த பாதையில் இருந்தது..
  (டிஸ்கி:: ஏன் இந்த எருவாட்டி எல்லாம் ரவுண்டு..ரவுண்டா இருக்கு..பூமி ரவுண்டுக்கும்..இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?? )
   


  அப்போ தான் மண்டைக்குள்ளே பல்பு ".மடச்சி..சைக்கிளே இன்னும் ஓட்ட தெரில..நீ எப்புடி மாட்டு வண்டி..லார்ரி எல்லாம்...னு.."

  அப்போ தான் அந்த மெடிக்கல் மிராக்கில் நடந்துச்சு....என் அத்தை பையன் சம்மர் லீவுக்கு எங்க வீட்டுக்கு வந்தான்..கோழிய அமுக்கிர மாதிரி அமுக்கி..சைக்கிள் கத்துக்குடுக்க டீலிங் பண்ணியாச்சு ..
  குரங்கு பெடல் போடும்போது(ஒரு குரங்கே..குரங்குபெடல்
  போட்டதாம்..!!)) அவனும் பின்னாடியே ஓடி வருவான்..அப்போ தெருவில் 4,5 நாய்கள் பின்னாடியே தொரத்தும்..இதை அவன்கிட்டே சொல்ல கொஞ்சம்சோம்பேறியா இருக்கும்..அதுக்குள்ளே நாய்கள் எங்களை ரீச் பண்ணிரும்...நான் டமால் ன்னு சைக்கிள் ஐ போட்டுட்டு  ஓடி போயிருவேன்..நாய் கடுப்பாகி அப்பாவி அத்தை பையனை கடிச்சு வச்சுரும் ..இது மாதிரி ரெண்டு தடவை நாய்க்கு நல்ல பிஸ்கட் ஆ இருந்து தான் ஒரு சிறந்த தியாகி னு நிருபிச்சிருக்கான்
  அப்புறம்..அப்பத்தா காலுக்கு தேய்க்கும் எண்ணையை(வெளக்கெண்ணை+வேப்பெண்ணை) எடுத்து பிரண்ட்ஸ் க்கு அப்பளம் சுட்டு தந்த (அது மட்டும் தான் அந்த வயசில் தெரியும்)கதை லாம் எதுக்கு உங்களுக்கு..


  (டிஸ்கி:: என் அன்பார்ந்த கழக கண்மணிகளே!!அப்பளம் 'கப்பு' தாங்காமல் அன்று ஓடி போன நீங்கள் எங்கே..எங்கே...?/))


  இப்படியே போயிட்டு இருந்த என் வசந்த வாழ்வில்..பொறாமை பட்டு என் தாத்தா என்னை கொண்டு போயி விட்ட இடம் நூலகம்!!

  (டிஸ்கி:: அய்யோயோ..அப்போ லைபிரரி கதி..ம்..அப்புறம்??)
  துவக்கத்தில் ராணி காமிக்ஸ் இல் ஆரம்பிச்ச பழக்கம்,அப்படியே அம்புலிமாமா,பாலமித்ரா,கோகுலம்,ரத்னபாலா னு தொடருச்சு..அப்புறம் பள்ளி,வீடு,நூலகம் னு மட்டுமே கதியானேன்
   
   
  (டிஸ்கி:: ரொம்ப ஸீன் போடுறமாதிரி இருக்கே...)
  (டிஸ்க்கி:: சரி சரி..இப்ப என்ன தான் சொல்ல வர..??)
  ஆங்..!!அப்படியே படிக்கும்போது சில புத்தகங்கள் தட்டுப்படும்..

  அதுல முதல் 2 வரிய படிச்சவுடனே..  "மூளை குழம்பி,கண்கள் நெக்குருக..நாபிக்கமலம் நடுநடுங்க..""


  (டிஸ்கி:: எச்சூச்மீ..என்னாச்சு??..நல்லாதானே போயிட்டு இருந்துச்சு..)
  ஹீ..ஹீ..இந்த பதிவில் ரெண்டாவது பாரா  வரி மாதிரியே இருக்கும்னு சொல்ல வந்தேன்..
  நூலகத்தில் இந்த மாதிரி (எனக்கு)புரியாத புத்தகங்கள் யாரும் படிச்ச மாதிரியோ..வீட்டுக்கு எடுத்துட்டு போற மாதிரியோ தெரிஞ்சதில்லை..அப்பவே யோசிப்பேன்..ஏன் இப்படின்னு..??  சில புத்தகங்களை இப்படி ஏதாவது பக்கா இலக்கிய தமிழில் இருக்குமோனு கூட பயந்து இன்னும் படிக்காமலே இருக்கேன்..அப்படி பயந்தது..பொன்னர் ஷங்கர்..பொன்னியின் செல்வன்..சாண்டில்யன் கதைகள்,பல ,சில சரித்திர கதைகள் ..  பொன்னியின் செல்வன் புத்தகம் எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றாங்க..நிச்சயம் எனக்கு புரியற மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்..படிக்கோணும்..


  இப்படி பயந்து ஒரு துணிச்சலாய் "ஏல..தெகிரியமாய் படில"..ன்னு சொல்லி படிச்சு அசந்தது தி.ஜா வின் "மோகமுள்"
  அதே மாதிரி சில எழுத்தாளர்களின் படைப்புகள் ஓரம் கட்டப்படும்..உதாரணமாய் ராஜேந்திரகுமார் கதைகள்..அவர் எழுத்துக்களை பொண்ணுங்க படிக்க முடியாதுன்னு என்கிட்டே சொல்லிருக்காங்க..நூலகம் போகும்போதெல்லாம் பார்ப்பேன்..என்ன தான் எழுதிருக்கார்னு படிக்க ஆர்வம் இருந்தாலும்..நடிகர் பாண்டு மாதிரி இருந்த நூலகர்.."பாப்பா!....அதெலாம் நீ படிக்க
  படாது"ன்னு பிடுங்கி வைத்த கோர சம்பவங்களும் நடந்து இருக்கு அப்போ..
   
  (டிஸ்கி:: "சர்வர்..ராஜேந்திரகுமார் நாவல்..ஒரு பார்சல்...")  சமீபத்தில் ஒரு வார இதழில் பிரபல பெண் எழுத்தாளர் சொல்லி இருந்தார்..மன அழுத்தம் குறைக்க ராஜேந்திரகுமார் கதைகள் படிச்சு பாருங்க..பெண்களுக்கு ஊக்கமும்,நகைச்சுவையும் கிடைக்கும்னு சொல்லி இருந்தாங்க...அதை படிச்சு மீண்டும் அசந்தேன்...ஓடு..லைபிரரி!! போயி தேடி..யுரேகா..யுரேகா னு கத்தினேன்..ஒரு சிறுகதை தொகுப்பு மாட்டுச்சு..
  அப்பவே வந்து படிச்சேன்..சத்தியமா சொல்றேன்..கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சேன்..அந்த அளவுக்கு நகைச்சுவை..ஒரு முற்போக்கு எண்ணம்..பெண்கள் நிலை பத்தி..கதைகள் எல்லாம். அதில் ரொம்பவே நாகரிக எழுத்துக்களை உணர்ந்தேன்...


  (டிஸ்கி: : கொட்டாவி வருது..யக்கா..என்ன சொல்லனும்னு சொல்லி தொல!)
  இல்ல..இவராலே இப்படியும் எழுத முடியும்னு சொன்னேபூ...


  (டிஸ்க்கி: : ஓகே..பைனல் டச் ப்ளீஸ்..)
  என் தாய்மொழி தமிழ்..என்னால் நன்றாய் தமிழ் பேச,எழுத முடியும்...ஆனால் என்னாலே என் மொழி படைப்புக்கள் சிலவற்றை புரிஞ்சுக்க முடில..உணர முடில..ரசிக்க முடில...
  (டிஸ்கி:: உனக்கு ஞானம் இல்லக்கன்னு!!..)


  என்னை பொறுத்தவரை ஒரு நிறைவான படைப்புங்கிறது..அடித்தட்டு மக்கள் வரை சென்று அவன் அதை எளிதாக உணர்ந்து ரசிக்கணும்...
  (டிஸ்கி:: அட மக்கு! புரியலையா??இலக்கிய படைப்பு இலக்கியம் தெரிஞ்சவங்களுக்காக..!! உனக்கு குமுதம்,விகடன் தான் சரி!!)


  ஆங்..அப்போ..தமிழ் ஐயா தேடனும் போல இலக்கியம் படிக்க...


  (டிஸ்கி:: தமிழ் ஐயா!!சிக்காதிங்க..ஓடி போயிருங்க..!! விஷஜந்து வருது....)
  October 4, 2010

  அண்ணன் 'வண்டு' முருகனும்&காந்திஜெயந்தியும்..
  நாள்- அக்டோபர் 2  இடம்- மதுரை காந்தி மியுசியம் எதிரே இருக்கும் டீக்கடை..  (வண்டு முருகன் தன் அல்லக்கைஸ் உடன் கம்மிங்..)  அல்லக்கைஸ் (கோஷம்)..
  "பன்னி காய்ச்சலுக்கே பல்பு கொடுத்த டாக்டர்.வண்டு முருகன் வாழ்க.."
  ஆப்பிரிக்காவின் வருங்கால ஜனாதிபதி அண்ணன் வாழ்க..!"


  வண்டு முருகன்- இவனுங்க இங்க கத்துவானுங்க..கூட்டம்னு வந்தா கோர்த்து விட்டு ஓடி போய்டுவானுங்க...பேட் பாய்ஸ்..  வ.மு..(அ.கைஸ் பார்த்து...)-எலேய்..என்னங்கடா..ரோட்டுல எவனையும் காணோம்..நாம வரோம்னு முன்னாடியே சுதாரிச்சுட்டானுங்கலா???  அல்லக்கை 1 -இன்னிக்கு கெவுருமெண்டு லீவு பாஸ்..  வ.மு -ஆங்...இன்னிக்கு எனக்கு பொறந்தநாளு கூட இல்லயே...அப்புறம் எப்புடி...??  அல்லக்கை 2 -அண்ணே..ஒருவேள மூத்தற சந்துல நீங்க அடிவாங்கி இன்னிக்கோட 50 நாளு ஆச்சே..அத்த கொண்டாடுரானுங்களோ???  வ.மு - அட..கொரங்கு...கொரங்கு..  (வண்டு முருகன் பலமாக அந்த காரை வித்த சொப்பன சுந்தரி யார்கிட்டே இருக்கும்னு யோசிக்கும் வேளையில்..)  எதிரே தியாகி பரமசிவம் ஐயா டீ குடிக்க வருகிறார்..  வ.மு- என்ன மேன்..தொப்பிலாம்..??  தியாகி- ஐயா!சிறிது மரியாதையாய் பேசுங்கள்!!அது தொப்பி இல்லை..காந்தி குல்லா..  வ.மு- சரி..சரி..என்ன வெள்ளையும் சொள்ளையுமா ஷோக்கா இருக்கீரு..எந்த கட்சி மிஸ்டர்.குல்லா??  தியாகி- அசட்டு மனிதா! இன்று காந்தி ஜெயந்தி! சுதந்திரத்திற்கு அஹிம்சை முறையில் பாடுபட்ட அரும்பெரும் தலைவர் காந்தியடிகளின் பிறந்த தினம்.நீவிர் அண்ணல் காந்தி பற்றி அறியீரோ??  வ.மு-அடடா..காலங்காத்தாலேயே ஆரம்பிச்சுடானுன்களா...அப்போ வட எனக்கு இல்லியா..அவ்..வ்..வ்..  தியாகி- தீண்டாமையை எதிர்த்து மனிதனாய் வாழ கற்று தந்தவர்.விலங்குகளை கொன்று,உண்டு,வாழும் ஆதிவாசி நாகரிகத்தை விரும்பாதவர்.அண்ணல் அவர்கள்....  வ.மு- ஸ்,,ஸ்டாப்பூ..நானும் இஸ்கூல ஒண்ணாப்புல படிசிருக்கேன்பூ..அதுக்கு இப்ப என்னா??  தியாகி- அந்த உன்னத மகாத்மாவை தெரிந்துமா..அசட்டையாக பேசுகிறாய்..இன்று அவர் கொள்கைகளை நினைக்க வேண்டாமா..அவர்தம் பெருமைகளில் நாம் திளைத்திட வேண்டாமா?  வ.மு- நாராயணா..இந்த கொசு தொல்ல தாங்க முடிலேயேப்பா...  தியாகி- அண்ணல் காந்தியடிகளின் வேர்வையில் தான் ஐயா..உம் சுதந்திர சுவாசம் உனக்கு உரித்தானது..அது நினைவில் இருக்கட்டும்..அவர் பிறந்தனாளிலாவது நாலு நல்ல விஷயங்களை பண்ணலாமே..??

  வ.மு- பெரியவரே..! இப்ப என்னாத்துக்கு என் மேலே காண்டு..அப்ப்டிகா போயி எல்லா ஊட்டாண்டயும் போயி பாரு.எல்லாத்துக்கும் லீவு..எல்லாரும் 10 மணிக்கு எந்திரிச்சு..மொத நாலு வச்ச கறிக்குழம்ப சூடு பண்ணி சாப்டுட்டே ,டிவி ல வர பெசலு புரோகிராமு ஒன்னு விடாம பார்த்துகினு இருப்பானுங்க..சாயங்காலம் பார்க்கு,சினிமா..இல்லாட்டி பீச்சு போயி கடலை துன்னிட்டே கடல போடுவானுங்க..அப்புறம் நைட்டு பார்ட்டின்னு போயி கும்மியடிப்பானுங்க..எவன்யா இன்னைக்கு காந்திய நினைப்பானுங்கர??
  தியாகி- ஐயா!அப்போ இது தான் தற்போதைய நிலையா..?காந்தி ஜெயந்தி விடுமுறை பொழுது போக்க தான் பயன்படுத்தபடுகிறதா?அவர் கொள்கை ஏதும் நினைவூட்ட இல்லையா??
  வ.மு- ஷ்..ஷ்..அதானே சொல்லிட்டு இருக்கேன்..இப்பவே கண்ண கட்டுதே..ஷ்..ஷ்..
  தியாகி- (மிகவும் வருத்தமாய்) நான் இப்போது என்ன செய்வேன்..சுதந்திரம் வாங்கி தந்த மனிதருக்கு அதற்குரிய கவுரவம் அளிக்க தவறிவிட்டோமே...அண்ணலே..நான் என் செய்வேன்..என் செய்வேன்..??  வ.மு- என்ன செய்வியா?ம்..ம்..எந்திரன் ஷோ போக 50 ரூபா குறையுது..குல்லா பெரியவரே ..கொஞ்சம் கைமாத்து கிடைக்குமா??  தியாகி அதை கேட்காமல் தளர்ந்த நடையுடன் நடக்க..அப்போது சில வெளிநாட்டு காரர்கள் வெள்ளை உடையுடன்,காந்தி குல்லா அணிந்து..ராட்டை,பூக்கள் எல்லாம் கையில் எடுத்து கொண்டு..பயபக்தியுடன் காந்தி மியுசியம் உள்ளே நுழைகிறார்கள்..தியாகி பெருமூச்சு விட்டவாறு அதை பார்த்து கொண்டு அவர்களுடன் உள்ளே நுழைகிறார்..  ஜெய் ஹிந்த்..!!  பாரத மாதா வாழ்க! என கோஷம் உள்ளேயே அடங்கி விடுகிறது..


  ----------------------------------------------------------------------------------------------------------------------------------


  டிஸ்க்கி..  * நம் குழந்தைகளுக்கு சுதந்திரம்,காந்தி..அவர் பட்ட கஷ்டங்களை கதை மாதிரி அன்னைக்கு சொல்லலாம்..


  * முடிந்த அளவுக்கு சைவ உணவுகளை உண்ணலாம்..


  *ஏதாவது முதியோர் இல்லங்கள் போய்..ஆறுதல் வார்த்தை கூறி வரலாம்..


  *ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று இனிப்புகள் கொடுத்து சிறிது நேரம் விளையாடலாம்..


  *தானங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை தெரிந்து கொள்ளலாம்..


  *நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம்..


  *குழந்தைகளுக்கு எளிய பழக்கங்களை அறிவுறுத்தலாம்..

  (இந்த பதிவு பிடித்து இருந்தால்..தங்கள் கருத்துக்களை  இட்டு செல்லலாமே..!!)