February 18, 2011

சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்..:))



இந்த பதிவை படிச்சிட்டு பெண்ணுரிமை(?!) கழகங்கள் யாரும் சண்டைக்கு வராமல் இருந்தாலே "யாம் பெற்ற பேறு" :))

(இங்கே "சில பெண்களை" பற்றி மட்டுமே சொல்ல போறேன் ..."சில ஆண்கள்" பற்றி மற்றொரு பதிவில் சொன்னால் போச்சு...:)) )

சில சமயங்களில், சில பெண்களின்,சில செயல்களை பார்த்தால்.. சில எரிச்சல்கள், சில கோவங்கள், சில வருத்தங்கள் உங்களுக்கு  வரலாம்..(ஹேய்...எத்தினி  'சில" ):)


எனக்கும் அப்படி வந்திருக்கு...:(

ஒருநாள்....

(என் தோழியிடமிருந்து போன்...
)

தோழி: ஆனந்தி..பாப்பாக்கு ஸ்கூல்ல ப்ராஜெக்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு ஒண்ணும சரியா தெரில..நீ ஹெல்ப் பண்றியா..??

நான்: "சொல்லு என்னனு"...

தோழி: *மதுரை கலெக்டர் பெயர்?
                *இந்தியாவில் சமீபத்தில் பிரித்த புது மாநிலங்கள்...?
                * நம் துணை  ஜனாதிபதி பெயர்?
                * MLA - விரிவாக்கம் ?
                *பட்ஜெட் எதற்கு??

இந்த அரிய(?) கேள்விகளுக்கு பதில் தெரியாத தோழியை நினைத்து ஆச்சர்யபட்டு,அவளின் பாப்பாக்கு பதில் சொல்லி விட்டு தோழியிடம் பொதுஅறிவை வளர்த்து கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். இடைமறித்த அவள் "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :))..சரி..யக்காவ்...நீ சீரியல் பாரு..அதுக்கு தான் நீ சரியான ஆள்..னு சொல்லிட்டு போன் ஐ வச்சுட்டேன்...இத்தனைக்கும் தோழி B.com. & P.G.D.C.A  படித்தவள் ..

ம்ம்..என்னவோ நம்மில் பலருக்கு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டும் ஆர்வம் மற்ற பொது விஷயங்களை தெரிஞ்சுப்பதில் ஆர்வம் கம்மியாய்டுது தான் இல்லையா??


இன்னொரு எரிச்சல்...

ஒரு நடுத்தர வயது அம்மா பாதி நாள் கோவில் சர்வீஸ்(??!!) பண்றதிலே தான் கழிப்பாங்க...இல்லாட்டி அந்த அம்மா கோவிலில் "ஒரு கும்பல் ஆப் பெண்களிடம் "பொறணி ஸ்பீகிங் இல் இருப்பாங்க...


அன்னைக்கு பிரதோஷம்...அதிசியமாய் நானும் கோவிலுக்கு ஆஜர்..ஒரு 7 அல்லது 8 வயசு பாப்பா முடியை விரிச்சு போட்டுட்டு(நீண்ட முடி) ரிப்பன்,சீப்பு எல்லாம் கையில் வச்சுட்டு அந்த அம்மாவை இப்படி கெஞ்சிட்டு இருந்தது.."அம்மா ஸ்கூல் ல இருந்து அப்பவே வந்துட்டேன்...காப்பி போட்டு தாம்மா..ப்ளீஸ்..டியூஷன் போவனும் மா..நேரம் ஆகுதும்மா...ப்ளீஸ் தலையாவது பின்னி விடும்மா...வீட்டுக்கு வந்துட்டு போம்மா..ப்ளீஸ் ம்மா..." அந்த அம்மா என்னவோ திட்டி அந்த குட்டியை விரட்டி விட்ருச்சு...

விரட்டி விட்ட பிறகு அந்த அம்மா கூட இருந்த பொறணீஸ் கும்பல்ஸ் கிட்டே சொல்றாங்க இப்படி "நமக்குன்னு ஒரு சுதந்திரம் இல்லை...ஒரு கோவில்ல கூட நிம்மதியா சாமி கும்பிட (?) முடியல..எப்ப பார்த்தாலும் புள்ள..புருஷன்னு பாக்க வேண்டிருக்கு..ஆணாதிக்க உலகம்..."ன்னு இன்னும் என்ன என்னவோ சொல்லுச்சு...


என்னவோ அந்த அம்மா குறிப்பிட்ட "அந்த ஆதங்கம்" என்னாலே ஏத்துக்க முடியலே..உரிமை வேற...கடமை வேற.....அந்த அம்மா ரெண்டுக்கும் கொழப்புதுன்னு மட்டும் தோணிச்சு...


கடைசி எரிச்சல் ...

சில வீடுகளில் வயசான கணவனை/மனைவியை தனியா விட்டுட்டு பக்தி,விரதம் அப்டிங்கிற பெயரால் கோவில் குளம் டேரா அடிக்கும் பெண்கள்/ஆண்கள் மேலே எப்பவும் எனக்கு வருத்தம் உண்டு...

எங்கள் வீட்டுக்கருகில் இப்படி சஷ்டி விரதத்துக்காக அந்த ஆன்ட்டி திருசெந்தூர் போயி மித மிஞ்சிய பக்தியில் அங்கேயே இருந்து விட, தனியாய் இருந்த அவங்க வயதான கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எங்கள் ஏரியா வாசிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்தாங்க..


விரதம் எல்லாம் முடிஞ்சு நிதானமா வந்த அந்த அம்மா கிட்டே விஷயத்தை நாங்கள் பதட்டமாய் சொல்ல..கொஞ்சமும் சலனப்படாமல் அந்த அம்மா இப்படி சொன்னாங்க.." நான் எங்கே போனாலும்,எம்பெருமான் முருகன் பார்த்துகிட்டான் தானே ...." என்னவோ இதை கேட்டு..பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு..

ம்ம்..சில நேரங்களில் ...சில எரிச்சல்கள் ...அதில் சில பெண்களும்...!!!!!



 

February 11, 2011

கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!

"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:))
 நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))

காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))


கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?


மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!!  இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு  ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள்
,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...

நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....

அட! அது பற்றி தான்  ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...

ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...

என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக. 


அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
 
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)

மற்றொரு விஷயம்...

கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..

எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??

கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..

மதிப்பிற்குரிய ஐயா ,
                                     

                                         என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு  அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "

வணக்கத்துடன்,
அருண்குமார்..

இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.............................................

"பிணக்கோலத்தில்  மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."

குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)

என் அழகு அம்மா!!
என்னுயிர்  அம்மா!!

அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!

என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!

பெரிய தங்கைக்கு
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!

சின்ன தங்கைக்கு
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
 

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய்  இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


February 1, 2011

இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில் சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம் மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))


January 24, 2011

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!




நாகரிகம்..!!ம்ம்..நான் சொல்வது உடை சம்பந்தப்பட்டது இல்லை..உணர்வு சம்பந்தப்பட்டது..!! நாகரிகமற்ற,லஜ்ஜையில்லாத சில மொழி அசைவுகள் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை...


பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."



தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின்  "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "



இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!




நம்ம ஊரில்  உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...



அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல  சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(

ஒரு முறை..

ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ
இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள  ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில்  உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..


பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய்   இருந்தது.



"ரிக்ஸா மிதித்து மிதித்து

காச்சு போன -அம்மனிதன் 
கரும்பாதம்
அன்று  ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "

நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???




இன்னொரு சம்பவம்....


ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு  கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...

"அந்த  சின்ன புன்முறுவலில் -என்

சினம் யாவும் போயாச்சு!!"
 
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))   

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!

January 19, 2011

திரும்பி பார்ப்பதில் ஏனோ பெரிய விருப்பம் இல்லை..:))


பெரும்பாலும் பல நேரங்களில் திரும்பி பார்ப்பதை என்னவோ விரும்புவதில்லை..அனுபவித்த கசப்பான விஷயங்களை ரீவைண்ட் பண்ணி பார்ப்பதிலும் ஏனோ பெரிய விருப்பமும் இல்லை...ஒரு வேளை அது மேலும் என்னை சோர்வாக்கும் பயமான்னு தெரியல..:)) 


சந்தோஷ விஷயங்களை லேசாக புரட்டி பார்த்துட்டு தீவிரமா யோசிக்கவும் கொஞ்சம் பயம்...அட போன வருஷம் அப்டி..இந்த வருஷம் உருப்படலையே னு ஒரு ஒப்பீடு லேசா கூட மனதின் ஓரத்தில் வரும்போது அதுவும் சில நேரங்களில் சோர்வாக்கும் அபாயமும் ஏற்படுது எனக்கு...:)))


சுவாரஸ்யம் அடிபட்டு போகும் சில தொடர்பதிவுகளில் எழுத எனக்கு அதிக யோசனை தான். எனக்கு பிடித்த பத்து பாட்டுக்கள் விரவி போயி பத்து பேருக்கு எப்படியும் பிடிக்குது. இதில் நானும் என் பங்குக்கு எழுதி அரைத்த மாவை அரைக்க இஷ்டமில்லாமல் விலகியே இருந்தும் இருக்கிறேன்..:))



"uniqueness" அடிபட்டு போகும் ஒரே மாதிரி கிளிஷே தொடர் பதிவுகளில் படிப்பதற்கு பெரிய சுவாரஸ்யங்களும் இருக்க போவதில்லை என்பது என் எண்ணம்...


"திரும்பி பார்க்கிறேன் " தொடர் பதிவில் இல் நிச்சயமாக அவரவர் தனி பிம்பங்கள்..உணர்வுகள் மட்டுமே இருக்கும் உள்ளடக்கம் னு யோசிச்சு ஒரு வழியாக என் அருமை இணைய சகோதரர்கள் கணேஷ் மற்றும் பாலாஜி சரவணன் அழைப்பினை ஏற்று இந்த பதிவு :)


என் காலடி தடம் பதிந்த  சில கடந்து வந்த பாதைகள்...


வலையுலகை தவிர்த்து என் ஒரே செல்ல மகனுக்கு கற்று கொடுக்க ரோபோடிக்ஸ் முதல் அல்காரிதம் வரை மீண்டும் தெரிந்து கொண்டு என் மூளையை  புதிப்பித்து கொண்ட தருணங்கள் ...



என் பையன் அவனுக்கு கிடைத்த பாராட்டுகள் மூலமாய் எனக்கு தேடி தந்த பெருமை மிகுந்த தாய்மை உணர்ந்த நிமிடங்கள் ...



சில அற்புத சுயதேடல் நூல்கள் தேடி படித்த தருணங்கள் ..பரிச்சயம் இல்லாத மனிதர்களின் ஒரு நொடி புன்னகைகள்...



சில வெளியூர் பயணங்கள்...பிரயாணங்களில் சந்தித்த சில குட்டி குட்டி சுவாரஸ்யங்கள்...முறுக்கி கொண்டு இருந்த சில உறவுகளின் நெகிழ்வான பாச தருணங்கள்..



போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்...



இதை தவிர்த்து எல்லாமே வழக்கம்போல...வழக்கம் போல...:))



இணையம் எனக்கு புதுசு இல்லைனாலும் நாலு வருஷமாய் இணையத்தை சுத்தமாய் விட்டு விலகி இருந்த என்னை மீண்டும் இழுத்துட்டு வந்தது என் நண்பன்/வழிகாட்டி ரமேஷ்@ராசுகுட்டி..



ஆகஸ்டில் விளையாட்டாய் ப்லாக் தொடங்கி,விளையாட்டாய்(!) போய்கிட்டு இருக்கு ..எந்த இலக்கும் இல்லாமல் மனசுக்கு தோணிய மாதிரி பதிவுங்கிற(?) பெயரில் கிறுக்கிட்டு இருக்கேன்...:))


கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..



தற்காலிகமாய் 
மனம் மாறி
விடுகிறேன்.................... .....:)