Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

January 13, 2011

இதுக்கு பேரு பக்தியா....??!!!



என்னை அதிகமாய் குழப்பிய,யோசிக்க வைத்த,சில நேரம் வாதம் பண்ண.பல நேரம் விதண்டாவாதம் பண்ண,விளங்கி கொள்ள,புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் "பக்தி"..

பக்தி ங்கிற பெயரில் கோவிலில் மற்றும் பொது இடங்களில் கூத்தடிக்கும் பக்தியாளர்கள்(?!) பார்த்தாலே....ம்ம்...என்னத்தை சொல்ல...


யார் வீட்டு பூக்களையோ அவசரமாய் திருடிட்டு  போயி கடவுளுக்கு படைக்கும்  சில படித்த மேதாவிகள்...நான்  அதிகமாய் எரிச்சலைடையும் பக்தி(?) சார்ந்த விஷயத்தில் இதுவும் ஒன்று...


எப்போ இருந்து பக்திக்கான  அவஸ்தையான/குழப்பமான விடை கண்டுபிடிக்கும்(?!) எண்ணம் வந்துச்சுன்னு சரியா தெரியல..ஆனால் என் வாழ்வில் நான் கடந்து போகும் சம்பவங்களில் கூட சில மைக்ரோ கணங்களில் அது தான் பக்தி னு உணர்ந்திருக்கேன்...


அந்த சில கணங்கள்.....


கோவில் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட அல்லது கட்டாயமாய் அந்த கூன் தாத்தாவை பார்த்திடுவேன்..அங்கெங்கே கிழிந்த பழைய சுத்தமான கதர்வேட்டி..தோளில் சுத்திய குற்றால துண்டு,உடம்பெல்லாம் விபூதியுடன் ,தன் நடுங்கி போன கைகளுடன் தினமும் கோவிலுக்கு ஆஜர்.அவர் கொடுக்கும் சொற்ப சில்லறைக்கு தகுந்த, மிகவும் சொற்ப உதிரிப்பூக்களை கோவில் பூக்காரம்மா கொடுப்பதை வாங்கிட்டு கடவுளுக்கு அதை படைச்சுட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு தன் செருப்பில்லாத கால்களுடன் மெதுவாய் போயிருவார்..


இரக்கப்பட்டு யாராவது உதவவோ ,பூ வாங்கியோ  தந்தால்கூட நாசுக்காய் மறுத்து அந்த சொற்ப பூக்களோடு கடவுளை சந்திக்க சென்ற அந்த கணத்தில்....


நீ படைத்த

சொற்ப பூக்களில்
தினம் தினம்
சொர்க்கம் கண்டாய்!
என் அழகு கூன் தாத்தா..!
கண்டேன் பக்தியை...
உன் தன்மான உருவிலும்...!!!!

அப்புறம்...


குடும்பத்தோடு மீனாக்ஷி அம்மன் கோவில் போயிட்டு பூஜைகள் முடிஞ்சு வெளியே வந்தோம்..."மூணு பத்து ரூவா" னு கூவிகிட்டே கைக்குட்டைகள் கைமுழுவதும் அடுக்கி விற்பனை செய்த வாலிபன் எங்களை பின்தொடர.. கையில் வச்சிருந்த பிரசாதங்களில்  கொஞ்சம் எடுத்து என் பாட்டியம்மா அந்த பையன்கிட்டே கொடுத்தாங்க ..அவன் ஒரு நொடி தயங்கிட்டு,செருப்பை ஓரமா கழட்டி போட்டுட்டு..பயபக்தியா வாங்கிட்டான்..அப்போ தான் அவனை கவனிச்ச பாட்டிம்மா "தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்...னு" சொல்லிட்டே போன அந்த கணத்தில்....


நீ  விற்கும்

கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும்....!!!!

அப்புறம்...


பாட்டியின் தீவிர கடவுள் நம்பிக்கையின் படி பூஜை,புனஷ்காரங்கள் ஒரு புறம் நடந்தாலும், மறந்தும் கோவில் பக்கம் போகாத,கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமான,சுயமரியாதை விரும்பி என் தாத்தா..என் ஏழாவது வயதில்,உடம்பில் ஒரு இன்ச் விடாமல்(நாக்கு உள்பட) கொப்புளங்களுடன் கடுமையான அம்மை நோய் பிடியில் சிக்கிட்டேன்..இயற்கை உபாதை கழிக்க கூட உயிர்போகும் அளவு கத்துவேன்(அந்த இடங்களிலும்  கொப்புளங்கள் )தனியார் மருத்துவமனை ஜீ ஹெச் கொண்டு போங்கனு சொன்ன தருணத்தில்..வீடே கண்ணீரோடு..


அப்போ தாத்தா செஞ்சது நான் சாகும் என் கடைசி நொடி வரை என்னாலே மறக்க முடியாத ஒரு செயல்...கிட்டத்தட்ட எலும்பும்,தோலும்..தோலை முழுவதும் போர்த்திய கொப்புளங்களுமாய் இருந்த என்னை மெல்லிய வேஷ்டியில் சுற்றி,அப்படியே தூக்கிட்டு சாமி அறையின் வாசலில் கிடத்தினார்..உள்ளே இருக்கும் சாமி சிலைகளை பார்த்து சத்தமாய் "இந்த பிஞ்சு பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு...." ன்னு கத்திட்டே என்னை அவர் நெஞ்சில் போட்டுகிட்டு அழுத அந்த கணத்தில்......


இன்னும்...

என்னில்
மிச்சமிருக்கும்
அந்த ஒன்றிரண்டு
அம்மை தழும்புகளை
தினம்தோறும்
ஆசையாய் 

தொட்டு பார்க்கிறேன்!!!
மண்ணில் மறைந்து விட்ட
என் செல்ல  தாத்தாவின்
நேசத்தை அனுபவித்த
"பக்தி" யோடு...!!!!